முகப்பேர் பகுதியில் முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது
அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை சரமாரி கத்தியால் குத்திய பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை முகப்பேர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன் (45). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர்களுக்கு இடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்ற போட்டி நிலவி வந்துள்ளது. நேற்று முன்தினம் முகப்பேர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் முருகன் மது அருந்திவிட்டு வெளியே வந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த சரவணன், முருகனை பார்த்து முறைத்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கத்திகளால் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் முருகனின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். பயந்துபோன சரவணன் தப்பிஓடிவிட்டார். முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர். நேற்று போலீசில் சரவணன் சரணடைந்தார். விசாரணையில், முகப்பேர் பகுதியில் உள்ள ஆவின் கடையில் வீடுவீடாக பால் பாக்கெட் போட்டு வருகிறார். முருகனுடன் அவ்வப்போது தகராறு ஏற்படும். சம்பவத்தன்று பாடிபுதூர் பகுதியை சேர்ந்த நண்பர் மணியுடன் (30) டாஸ்மாக் கடையில் மதுஅருந்திவிட்டு பேசிகொண்டிருந்த போது அங்கு வந்த முருகன், என்னை முறைத்தபடி பார்த்தபோது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டோம். மணிகண்டன், திடீரென முருகனை தாக்கி, ‘நானே ஒரு பெரிய ரவுடி என்னை பார்த்து நிறையபேர் பயப்படுவார்கள். என் எதிரே என் நண்பனை தாக்குவியா’ என மிரட்டி கத்தியால் முருகனின் கழுத்தில் சரமாரி குத்தினார். இருவரும் தப்பினோம். போலீசார் தேடுவதையறிந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தேன். முருகனை நான் கத்தியால் குத்தவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து திருமங்கலம் உதவி ஆணையர் பரமானந்தம் தலைமையிலான போலீசார், அமைந்தகரை பகுதியில் பதுங்கி இருந்த மணியை நேற்று கைது செய்தனர். விசாரணையில், ஜெ.ஜெ.நகர் பகுதியில் பிரபல ரவுடி காளிதாஸ் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கு, அமைந்தகரை பகுதியில் போலீசாரை தாக்கியதாக கொலை முயற்சி வழக்கு உள்ளது. ஜெ.ஜெ.நகர் பகுதியில் கைது செய்ய சென்ற தலைமை காவலர் உட்பட 2 காவலரை சரமாரியாக தாக்கி ஒரு காவலரின் மூக்கு அறுக்கப்பட்டது. மற்றொரு காவலரின் காதுகிழிக்கப்பட்டது. இதுதொடர்பாக இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உட்பட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரை கைது செய்ய போலீசார் சென்றால் பீர்பாட்டிலை உடைத்து கூர்மையாக வைத்து கொண்டு போலீசாரை மிரட்டுவார், இதனால் இவர் பட்டபெயர் பாட்டில் மணி என அழைப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த பிரபல ரவுடி பாட்டில் மணியை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.