காட்பாடியில் பெண் தவறவிட்ட ரூ.75 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
வேலூர் : காட்பாடியில் பெண் தவறவிட்ட ரூ.75 ஆயிரத்தை மீட்டு ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் சால்வை அணிவித்து ஆட்டோ டிரைவரை பாராட்டினர். காட்பாடி அடுத்த பொன்னை புண்ணியபூமி பகுதியை சேர்ந்தவர் வரதன்.
இவரது மனைவி சாந்தி(55). காய்கறி வியாபாரம் செய்பவர். இவர் சுகர்மில் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வேலூரை நோக்கி வந்தார்.
காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகே வந்தபோது சாந்தி பர்சில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பர்சுடன் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக காட்பாடி போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் சத்துவாச்சாரியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற ஆட்டோ டிரைவர் சாலையோரம் இருந்த மணிபர்சை மீட்டு, காட்பாடி போலீசில் ஒப்படைத்தார்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் அது சாந்தியுடைய பர்ஸ் என தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடி போலீசார் பணத்தை தவறவிட்ட சாந்தியை வரவழைத்து ரூ.75 ஆயிரத்தை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பணத்தை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயனுக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.