ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா, அடுத்த போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினர். டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 142 ரன்களை குவித்தார். மிட்செஸ் மார்ஷ் 106 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களை குவித்தார். கேமரூன் கிரீன் 55 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 118 ரன்களை குவித்தார். அலெக்ஸ் கேரி 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 431/2 ரன்களை குவித்து வரலாறு படைத்தது.
இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. அதிகபட்சமாக டிவோல்ட் பிரேவிஸ் 28 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்களை குவித்தார். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி, 24.5 ஓவர்கள் முடிவில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.