ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வோம்: ரோகித்சர்மா நம்பிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து 38 வயதான ரோகித்சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சுப்மன் கில்,துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2027ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.
ஆனால் ரோகித்சர்மா பதவி நீக்கத்திற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் நேற்று 27வது சியட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஒருநாள், டி20 ,டெஸ்ட்டில் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டி.20யில் சிறந்த பேட்டர் விருதை சஞ்சு சாம்சன், பவுலர் விருதை வருண் சக்ரவர்த்தி பெற்றனர்.
மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் விருதை ஸ்மிருதி மந்தனா, பவுலர் விருதை தீப்தி சர்மா பெற்றனர். சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இங்கிலாந்தின் ஹாரி புரூக், பவுலராக இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, சிறந்த கேப்டனாக தென்ஆப்ரிக்காவின் பவுமா,ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனாக நியூசிலாந்தின் வில்லியம்சன், பவுலராக மாட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சிறப்பாக வழிநடத்தியதற்காக ரோகித்சர்மாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய ரோகித்சர்மா,”ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதை நான் விரும்புகிறேன். கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சவாலான நாடு. அங்குள்ள மக்களும் விளையாட்டை விரும்புகிறார்கள், ஆனால் நிச்சயமாக, ஆஸ்திரேலியா எங்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான சவாலாக உள்ளது.
பல முறை அங்கு சென்றுள்ளதால், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நாங்கள் அங்கு சென்று இந்திய அணி செய்ய வேண்டியதைச் செய்து எங்களுக்குச் சாதகமாக முடிவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
* ”கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்த போதிலும், சாம்பியன் டிராபியை வெல்ல , அதற்கு முன் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டே காரணம்” - ரோகித்சர்மா