மகளிர் ஏ 3வது ஓடிஐ இந்தியாவை சிதறடித்து முந்திய ஆஸ்திரேலியா : தொடரையும் வசப்படுத்தியது
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் ஏ அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன. இந்நிலையில், கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா (52 ரன்), நந்தினி காஷ்யப் (28 ரன்) சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தனர். அதன் பின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 47.4 ஓவர் மட்டுமே ஆடிய இந்திய அணி, 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸி தரப்பில், தஹ்லியா மெக்ராத் 3, சியானா ஜிஞ்சர், எல்லா ஹேவர்ட், அனிகா லீராய்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன் பின், 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் தஹ்லியா வில்சன், அலிஸா ஹீலி இந்திய பந்து வீச்சை சிதறடித்து ரன்களை குவித்தனர். அவர்களின் அதிரடி ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 137 ரன் குவிந்த நிலையில், 59 ரன்னில் இருந்த வில்சன் அவுட்டானார். பின் ராச்செல் ட்ரெனெமான் களமிறங்கினார்.
அதன் பின்னும் அலிஸாவின் (137 ரன்) கதகளி ஆட்டம் தொடர்ந்ததால், 27.5 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து, 222 ரன்னுடன் ஆஸி, 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. அதன் மூலம், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் தொடரையும் ஆஸி கைப்பற்றியது.