ஆஸியுடன் 4 நாள் டெஸ்ட்: இந்தியா மகளிர் ஏ அணி 254 ரன் முன்னிலை: அசத்தலாய் ஆடிய ராகவி
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து, 254 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மகளிர் ஏ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று வருகிறது.
கடந்த 21ம் தேதி துவங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 299 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி மகளிர் ஏ அணி, 305 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 3ம் நாளான நேற்று இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, நந்தினி காஷ்யப் பொறுப்புடன் ஆடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த நிலையில், நந்தினி (12 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த தாரா குஜ்ஜார் 20 ரன்னில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து ஷபாலி வர்மா 52 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின் வந்தோரில் ராகவி பிஸ்ட் சிறப்பாக ஆடி 86 ரன் குவித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 73 ஓவரில், 8 விக்கெட் இழந்து, 260 ரன் எடுத்திருந்தது. ஜோஷிதா 9, டிடாஸ் சாது 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸி தரப்பில், அமி எட்கர் 4, ஜார்ஜியா பிரெஸ்ட்விட்ஜ் 2, மேய்ட்லன் பிரவுன், சியானா ஜிஞ்சர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில், இந்தியா 254 ரன் முன்னிலை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.