ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
சென்னை: ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை, மகன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டத்தை அன்புமணி நடத்தினார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார். அதில்,பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர், சாதாரண செயல் தலைவர்தான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சி பொதுக்குழு தன்னை தலைவராக தேர்வு செய்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை நாட அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அன்புமணி இரண்டு நாட்களில் டெல்லி செல்ல உள்ளதாகவும், பொதுக்குழுவில் தனது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என பாமக வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம். மருத்துவர் ராமதாஸ் தன்னை பா.ம.க. தலைவர் என்று அறிவித்துக் கொள்வதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. பாமகவின் நற்பெயருக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். கட்சி நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் கூட்டம் நடத்தலாம், ஆனால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என தெரிவித்தார்.