ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்..!!
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார். முதலில் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை அறிவித்த டிரம்ப், நேற்று கூடுதலாக 25% வரியை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலேயே வரி விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக உறவைப் பாதிப்பதாக இருக்கிறது.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்த நிலையில், அஜித் தோவல் புதினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.