கொலை முயற்சி வழக்கில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை: கொலை முயற்சி வழக்கில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே கடந்த 6ம் தேதி நின்றுகொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரை காவல்துறை ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னை தாக்கியது தொடர்பாக நான் அளித்த புகாரில் எதிர் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை. பொய் புகாரில் காவல்துறை என்னை கைது செய்துள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.