சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து திருட முயற்சி: ஆசாமி கைது
திருமலை: சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே சடலத்தை தோண்டி எடுத்து திருட முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த சங்கரா என்பவரின் மகன் திலீப் (22). இவர் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதனால் திலீப் உடல் வீட்டிற்கு கொண்டு வந்து உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலிக்கு பிறகு சனிக்கிழமை மாலை அங்கிசெட்டிபள்ளி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் மறுநாள் (ஞாயிறு) இரவு சுடுகாட்டில் ஒரு மர்ம நபர் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் திலீப் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியை அந்த மர்ம நபர் தோண்டி சடலத்தை வெளியே எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இதைப்பார்த்து, அந்த நபரை பிடித்து வைத்தனர். பின்னர் போலீசாருக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையறிந்த போலீசாரும், உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோவிந்த் என்பதும், சடலத்தை திருடிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்த்தை கைது செய்தனர். சடலத்தை திருட முயன்றது ஏன்? ஏதாவது மாந்த்ரீக பூஜை செய்வதற்கா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.