ராமதாஸ் ஆதரவாளரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; 10 ஆண்டாக தொடரும் பழிக்குப்பழி: பிரபல ரவுடியின் உறவினர் சிக்கினார்; விழுப்புரத்தில் காரை விட்டுவிட்டு தப்பிய கும்பல்
திருவிடைமருதூர்: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 10 ஆண்டுகளாக பழிக்குப்பழியாக நடந்த சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், ராமதாஸ் ஆதரவு வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின்(55). இவர் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, 7 பேர் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்றது. அவர் தப்பிவிட, டிரைவர் அருண்குமார்(25) மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இளையராஜா(37) ஆகியோரை அரிவாளால் வெட்டினர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவர் ம.க.ஸ்டாலின் தம்பி ம.க.ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேப்பெருமாநல்லூர் கோயில் திருவிழாவிற்கு வந்தவரை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இந்த கொலையில் பிரபல ரவுடி லாலி மணிகண்டனுக்கு தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்த லாலி மணிகண்டன் அவரது நண்பர்களை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதன் காரணமாக ம.க.ஸ்டாலினுக்கும் லாலி மணிகண்டன் குழுவிற்கும் முன்விரோதம் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. இந்தநிலையில் பாமகவின் உட்கட்சி பூசலில் அன்புமணி அணி பாமக மாவட்ட செயலாளராக வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவருக்கும் ம.க.ஸ்டாலினுக்கும் கடும் பகை ஏற்கனவே இருந்தது. இதற்கிடையில், திருவிடைமருதூர் சுக்கிரவாரகட்டளை தெருவை சேர்ந்த மகேஷ் (42) என்பவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் லாலி மணிகண்டனின் உறவினர் ஆவார். இதற்கிடையில் மர்ம நபர்கள் வந்த கார் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த காரை மர்ம நபர்கள் விழுப்புரத்தில் நிறுத்திவிட்டு வேறுஒரு காரில் சென்றுள்ளனர். விழுப்புரம் போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து ஆடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் எஸ்பி ராஜாராம் அறிவுறுத்தலின்படி டிஎஸ்பி ராஜு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய 7 பேர் கும்பலை சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனி டீமாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுதுறை பேரூராட்சி அலுவலகம், ம.க.ஸ்டாலின் இல்லம் உள்ளிட்ட 15 இடங்களில் சுமார் 75 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.