கேரளாவில் சர்ச் மீது தாக்குதல்: ஜன்னல் கண்ணாடி, கல்லறை சேதம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி உப்புதரை பகுதியில் சிஎஸ்ஐ சர்ச் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வீச்சில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. கல்லறையும் சேதப்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புதரை பகுதியில் செயின்ட் ஆண்ட்ரூஸ் சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. மோகன் லால் நடித்த லூசிபர் படத்தில் பல காட்சிகள் இந்த சர்ச்சில் தான் படமாக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த சர்ச் மீது ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கற்கள் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. கல்லறை சேதப்படுத்தப்பட்டு அதில் இருந்த சிலுவைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சர்ச் பாதிரியார் அருண் ஜோசப் உப்புதரை போலீசில் புகார் செய்துள்ளார். சமூக விரோதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக பாதிரியார் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.