ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: சின்னர் சாம்பியன்
டுரின்: ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரசை, இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகள், ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகின்றன. ஒரு காலண்டர் ஆண்டில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ள முதல் 8 வீரர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கு பெற முடியும். இப்போட்டிகள், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு பின் கவுரவம் மிக்கதாக கருதப்படுகின்றன. கடந்த 15ம் தேதி நடந்த அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினாரை வீழ்த்தி, இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜேனிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நேற்று முன்தினம் நடந்த மற்றொரு அரை இறுதிப் போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலிஸியாமேவை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிச் சுற்றில் சின்னர் - அல்காரஸ் மோதினர். நடப்பு சாம்பியனான சின்னரும், அல்காரசும் போட்டியின் துவக்கம் முதல் சீறிப் பாய்ந்து புள்ளிகளை பெற முற்பட்டனர். இருவரும் விட்டுத்தராமல் அற்புதமாக ஆடியதால் முதல் செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டும் இழுபறியாகவே காணப்பட்டது. அந்த செட்டும் டைபிரேக்கருக்கு செல்லும் நிலையில், சாமர்த்தியமாக ஆடிய சின்னர், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய சின்னர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்தார்.