ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் பைனலில் அல்காரஸ் சின்னர்
டுரின்: ஏடிபி பைனல்ஸ் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அட்டகாச வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இத்தாலியின் டுரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு முழுவதும் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 வீரர்கள் மட்டும் இந்த போட்டிகளில் பங்கேற்பர்.
இப்போட்டிகள், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்ததாக கவுரவம் மிக்கதாக கருதப்படுபவை. இந்நிலையில், நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலிசியாமே உடன் மோதினார்.
துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ், முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அநாயாசமாக ஆடிய அவர் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜேனிக் சின்னருடன், இறுதிப் போட்டியில் அல்காரஸ் மோதவுள்ளார்.