ஆத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய்க்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி அதிரடி கைது
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கண்ணாடி மில் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (எ) சேகோ சங்கர் (38). அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளராக இருந்து வருகிறார். சேகோ, பேக்டரிகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவார். இவர் ஆத்தூரை சேர்ந்த 3 குழந்தைகளின் தாயான 31 வயது இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்பெண் திருமண மண்டபங்களில் தூய்மை பணியை செய்து வருகிறார்.
இவர் நேற்றிரவு மாமியார் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அழைப்பதற்காக நடந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற சேகோ சங்கர், அவரை வழிமறித்து, ‘இனிமேல் இதுபோன்ற வேலைகளை நீ செய்ய வேண்டாம். மாதத்திற்கு 4 நாட்கள் மட்டும் அழைப்பேன். இதற்காக மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் கொடுக்கிறேன்’ என கூறி அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வருவதற்குள் சேகோ சங்கர் தப்பி விட்டார். இச்சம்பவத்தினால் கடும் மனவேதனை அடைந்த அப்பெண், இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். சங்கர் என்ற சேகோ சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த சேகோ சங்கர் தலைமறைவானார்.
இன்று அதிகாலை காவல் நிலையம் அருகில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்ஐ சிவசக்தி, தனிப்படை ஏட்டு சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று சேகோ சங்கரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.