தஞ்சை சிந்தடிக் ஓடுதளத்தில் முதன் முறையாக தடகள சாம்பியன் ஷிப் போட்டி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளி மற்றும் சிந்தடிக் ஓடுதளத்தில் முதன் முறையாக தடகள போட்டிகள் தொடங்கியது.தஞ்சாவூரில் உள்ள விளையாட்டு வீரர்களும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த மே 5 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, சிந்தடிக் ஓடுதளத்தில் முதன்முறையாக தடகள போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களின் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது.
இதில் விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் எம்பி முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து 6, 8, 10 வயது மாணவ, மாணவிகளுக்கு 40 மீ, 50 மீ, 60 மீ, 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் 6 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை காட்டினர்.
தொடர்ந்து 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்வில் தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதயவிழா குழுத் தலைவர் து.செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மருத்துவர் சுந்தர், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், தஞ்சாவூர் தடகள சங்கத்தின் செயலாளர் செந்தில், இணைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் தடகள சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு துறையின் நடுவர்கள் ஒருங்கிணைத்தனர்.