சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் பாஜ தேசிய தலைவர்கள்: வரும் 22ம் தேதி அமித்ஷா நெல்லை வருகை
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தை நோக்கி அடுத்தடுத்து பாஜ தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற இலக்குடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது.
மேலும், கூட்டணியில் தேமுதிக, பாமக.வை இழுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த 2 கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. தொடர்ந்து 2 கட்சிகளும் மவுனம் காத்து வருகின்றன. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் மக்கள் சந்திப்பு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் பாஜ தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூன் 7, 8ம் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். அவர் மதுரையில் பாஜ தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த ஜூலை 26, 27ம் தேதி என 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார்.
தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் மீண்டும் தமிழகம் வர உள்ளார். வரும் 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இந்த மாநாடு இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் மறைவால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பாஜ தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.