வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வென்று வரலாறு படைப்போம்: கலைஞர் நினைவு நாளில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை
சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழரையும் தமிழ்நாட்டையும் வாட்டிய கொடுமைகளை அஞ்சாமல் எதிர்த்த பேனா முனை. அறியாமைச் சிறையில் இருந்து தமிழ் மண்ணை விடுவிக்க நாள்தோறும் ஒலித்த திராவிட போர்க்குரல். ஆதிக்கத்தின் கோரப்பற்கள் தீண்டாமல் எளிய மக்களை காத்து நின்ற தாய்நிகர் தலைவர். கலைஞரின் நினைவு நாள் இன்று (நேற்று). டெல்லியை ஆக்கிரமித்து, தேர்தல் முறைகளையும் சிதைத்து, மக்களை அச்சத்தின் பிடியில் ஆளலாம் என்று நினைக்கும் பாசிசம் தமிழ்நாட்டில் மட்டும் சறுக்கக் காரணம் திமுக. இப்படிப்பட்ட பெருமைமிகு திமுகவை 50 ஆண்டுகாலம் தலைமையேற்று வழிநடத்தி, 75 ஆண்டுகால களப்பணி-இடைவிடாத சமூகப் பணியின் மூலம் வரலாறாகவே வாழ்ந்தவர் கலைஞர். முதல்வர்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் காட்டிய வழியில் நடைபோடுவோம், ஆதிக்கச் சக்திகளை துடைத்தெறிவோம். 2026ல்-200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க, கலைஞரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.