சட்டப்பேரவை தேர்தல் குறித்து சென்னையில் பாஜ தலைவர்கள் முக்கிய ஆலோசனை: கூட்டணியில் பாமக, தேமுதிகவை தக்க வைக்க முடிவு
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து சென்னையில் பாஜ தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் பாமக, தேமுதிகவை தக்க வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜ மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று சென்னை வந்தார். தி.நகரில் உள்ள பாஜவின் தலைமை அலுவலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டைகளை பார்த்த பின்னரே நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாஜ நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ், “சட்டப்பேரவை தேர்தலில் நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும், தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும்” என்பது பற்றி விரிவாக விளக்கி கூறினார். அது மட்டுமல்லாமல் பூத்வாரியாக கட்சியைப் பலப்படுத்துவது, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்து கொள்வது குறித்தும், ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் தலைவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காரில் அண்ணாமலை ஒன்றாக வந்தார். கூட்டத்தில் கலந்து பங்கேற்ற தலைவர்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டி அட்சதை தூவி வரவேற்றனர்.