வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்க மாட்டார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சூளையில் உள்ள அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ 400 தொகுதிகளை தாண்டி வெல்வோம் என்றதை இந்தியா கூட்டணி முறியடித்து கிட்டத்தட்ட இழுபறியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது தான் பெரிய மாற்றமாக உள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தற்போது பாஜவிற்கு தமிழக சட்டப்பேரவையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு பாஜ சட்டமன்ற உறுப்பினர் கூட தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையமாட்டார்கள். இதுதான் அந்த மாற்றமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.