அசாம் பாடகர் ஜூபின் கார்க் மர்ம மரணம் விழா ஏற்பாட்டாளர், மேலாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: முதல்வர் ஹிமந்தா தகவல்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் நடந்த வடகிழக்கு இந்தியா விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு பிறகு நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் செய்யும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஜூபின் கார்க் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதனிடையே ஜூபின் கார்க் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் வடகிழக்கு இந்தியா விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளரும், இசையமைப்பாளருமான சித்தார்த் சர்மா ஆகியோருக்கு எதிராக அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்ட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜூபின் கார்க் உடலை 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டார். இந்நிலையில் ஜூபின் கார்க் மரண வழக்கில் வடகிழக்கு இந்தியா விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளரும், இசையமைப்பாளருமான சித்தார்த் சர்மா ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “அக்டோபர் 6ம் தேதி இருவரும் கவுகாத்திக்கு வந்து தங்கள் வாக்குமூலங்களை தர வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.