சிங்கப்பூரில் அசாம் பாடகர் ஜூபின் கார்க் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அசாம் டிஎஸ்பி கைது
திஸ்பூர்: அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரபல பாடகராக இருக்க கூடிய ஜூபின் கார்க் கடந்த செப்.19-ம் தேதி சிங்கப்பூரில் இசைநிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது ஸ்கூபா டைவிங்கின் செய்யும் போது உயிரிழந்தார். முதலில் அவர் மூச்சுதிணறி உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அதன்பிறகு அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை தொடர்ந்து அசாம் மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஜூபின் கார்கின் உறவினர் சந்தீபன் கார்கிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூபின் கார்க் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சந்தீபன் கார்க் உடன் சென்றதாக கூறப்படுகிறது. இது சந்தீபன் கார்கின் முதல் வெளிநாட்டுப்பயணம் என்பது குறிப்பிடதக்கது.
இவர் சந்ரூப் மாவட்டத்தின் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஜூபின் கார்கின் மேலாளர், அவருடைய இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள 2 பாடகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 5-ஆவதாக சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய SIT காவல்துறையினர் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிய நிலையில் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.