அசாமில் வாக்காளர் திருத்த பணி வாக்காளர் பட்டியலில் விலங்குகள் படங்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு
புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியலில் மனிதர்கள் அல்லாத படங்களை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. அசாமில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அசாமில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை நடத்தவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு வாக்காளர் திருத்த பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 17ம் தேதி அசாமில் சிறப்பு வாக்காளர் திருத்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் நாய்,பூனை போன்ற விலங்குகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற நிலைமையை தவிர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலில் மனிதர்கள் அல்லாத புகைப்படங்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என அசாம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.