கோடி, கோடியாய் குவித்த அசாம் பெண் அதிகாரி கைது: ரூ.2 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கோடி, கோடியாக சொத்து குவித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் மாநில குடிமைப்பணி பெண் அதிகாரியான நுபுர் போரா, கடந்த 2019ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவர் பார்பெட்டா மாவட்டத்தின் வட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து, குடியேறிகளுக்கு பணத்திற்காக கைமாற்றியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உத்தரவின் பேரில், கடந்த ஆறு மாதங்களாக அவர் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.
தற்போது இவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோராய்மாரி பகுதியின் வட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சரின் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் கவுகாத்தியில் உள்ள நுபுர் போராவுக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண் அதிகாரி நுபுர் போரா கைது செய்யப்பட்டார்.