மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு போட்டி; வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம், கோப்பை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு நேற்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏஎஸ்எப் எனும் ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 4ம் தேதி ஆசிய அலைச்சறுக்கு போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து 9 நாட்கள் அலைச்சறுக்கு போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள் உள்பட 18 நாடுகளை சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, கடல் அலையில் அலைச்சறுக்கு பலகை மூலமாக சறுக்கி சென்றபடி பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தினர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆண்கள் 18 பிரிவில் கொரியா தங்க பதக்கமும், சீனா வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிர பதக்கமும் வென்றது. பெண்கள் 18 வயது பிரிவில் சீனா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், தாய்லாந்து வெண்கல பதக்கமும், கொரியா தாமிர பதக்கமும் வென்றது. ஓபன் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரமேஷ் புடிஹால் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மாமல்லபுரம்-கோவளம் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் 8 பிரிவுகளின்கீழ் முதல் 4 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி பாராட்டினார். அவருக்கு அலைச்சறுக்கு சங்கம் சார்பில், லேமினேஷன் செய்யப்பட்ட டி-சர்ட் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஆசியா அலைச்சறுக்கு போட்டிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கினார். கடந்த 2022ம் ஆண்டு உலக அலைச்சறுக்கு போட்டி, 2023 மற்றும் 2024ம் ஆண்டில் பாயிண்ட் பிரேக் சேலஞ்ச் மற்றும் தற்போதைய ஆசிய அலைச்சறுக்கு போட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.6.78 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இம்முறை ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், மாமல்லபுரம் நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.