ஆசிய துப்பாக்கி சுடுதல்: தமிழகத்தின் இளவேனில் தங்கம் வென்று சாதனை
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், 16வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
இதன் மூலம் அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஸின்லு பெங், 253 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். கொரியாவின் இயுன்ஜி க்வான், 231.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ், 208.9 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்தார். முன்னதாக, சீனியர் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா, ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தவிர, இரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.