ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற கபடி வீரர் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
சென்னை: பக்ரைன் நாட்டில் கடந்த 19ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை, ஆசிய நாடுகளின் இளையோருக்கான, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். அதோடு 18 வயது உட்பட்டோர்க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்த ஆண்டு கபடி போட்டியும் சேர்க்கப்பட்டு நடத்தப்பட்டது.
இதில் இளையோருக்கான ஆசிய கபடி போட்டியில், ஆடவர்கள் பிரிவில், 14 அணிகளும், மகளிர் பிரிவில், 10 அணிகளும் பங்கேற்று விளையாடின. இதில் ஆடவர் கபடி இறுதி போட்டியில், இந்திய அணி 35-32ல் ஈரான் நாட்டை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றது. அதைப்போல் மகளிர் பிரிவில், இந்திய அணி 75-21ல் ஈரான் நாட்டை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இதில் குறிப்பாக சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற வீராங்கனை, இந்திய மகளிர் அணி கபடி போட்டியில், தங்கப்பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார். ஆடவர் அணியில், தமிழ்நாட்டின் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்த வீரர் அவினேஷ் என்பவரும், இந்திய அணி தங்க பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தார்.
மேலும் 9 ஆண்டுகள் கழித்து, இந்திய மகளிர் கபடி அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரங்கனை தேர்வாகி, அந்த அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவியாக இருந்ததால், முதல்வர் ஸ்டாலினும், கார்த்திகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தங்கப் பதக்கம் வென்று சாதனைகள் படைத்த வீராங்கனை கார்த்திகாவும், கபடி வீரர் அபினேஷும், நேற்று மதியம், விமான மூலம், சென்னை திரும்பினர். அவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.