யு23 ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டிகளில் இந்தியா வெளியேற்றம்
தோஹா: ஏஎப்சி யு23 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிப் போட்டியில் இந்திய அணி, புருனை தருசலாம் அணியை வென்றபோதும், புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. கத்தாரின் தோஹா நகரில், ஏஎப்சி யு23 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிப் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, புருனை தருசலாம் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி 6-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் எச் பிரிவில் இந்தியா, 3 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றது. இப்பிரிவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கத்தார் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பஹ்ரைன் அணியை வெற்றி வாகை சூடியது. அதனால், 9 புள்ளிகளுடன் கத்தார் அணி முதலிடம் பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், இரு வெற்றிகள் பெற்றபோதும், புள்ளிகள் அடிப்படையில் பின்தங்கிய இந்தியா, போட்டியில் இருந்து வெளியேற நேரிட்டது.