மாமல்லபுரத்தில் இன்று ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்: வீரர்கள் சாகசம்
மாமல்லபுரம்: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை ஏஎஸ்எப்பின் ஆசிய அலைச்சறுக்கு போட்டிகள் மிக கோலாகலமாக துவங்கியது. இன்று முதல் வரும் 12ம் தேதிவரை மொத்தம் 9 நாட்களுக்கு மாமல்லபுரம் கடற்கரையில் 2025ம் ஆண்டுக்கான அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள் உள்பட 19 நாடுகளை சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள 12 வீரர், வீராங்கனைகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான, இன்று காலை கடலுக்குள் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அலைச்சறுக்கு பலகைகளில் ஏறி, பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
இப்போட்டியை கடற்கரையில் குவிந்திருந்த அப்பகுதி மீனவர்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் என 100க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதில் சில பார்வையாளர்கள் ஆர்வ மிகுதியால், சறுக்கு பலகைகளுடன் கடலுக்கு சென்ற வீரர், வீராங்கனைகளுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.