ஆசிய கோப்பை தொடர்; கில், பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி
பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19ம் தேதி ஓமன் அணியுடன் மோத உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி வரும் 4ம் தேதி துபாய் புறப்படுகிறது. இதனிடையே இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் உடற்தகுதி தேர்வு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்தது.
இதில் டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முகமது சிராஜ், ஜிதேஷ் சர்மா, பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் உள்ளிட்டோரும் தேர்ச்சி பெற்றனர். இதில் பிரசித் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். டி.20, டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்ற 38 வயதான ரோகித்சர்மா கடந்த 3 மாதமாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ஆடவில்லை. அக்டோபர் மாதம் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் களம் இறங்க உள்ளார். அதற்கு முன் செப். 30, அக். 3, 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏஅணியில் களம் இறங்க ஆர்வமாக உள்ளார்.