ஆசிய கோப்பை ஹாக்கி: அரங்கத்தில் கோல் மழை வங்கதேசம் வெற்றி வாகை
ராஜ்கிர்: பீகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பைக்காக ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. பி - பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் வங்கதேசம் அணியும், சீன தைபே அணியும் மோதின. போட்டியின் பெரும்பாலான நேரத்தில் வங்கதேச வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணியின் முகம்மது அப்துல்லா போட்டி துவங்கி 4வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். போட்டியின் 10 மற்றும் 18வது நிமிடங்களில் சீன தைபே வீரர் சங் யு ஹிஸீ அடுத்தடுத்து 2 கோல் போட்டார். அதைத் தொடர்ந்து 26 நிமிடத்தில் வங்கதேசத்தின் அப்துல்லா மீண்டும் ஒரு கோலடித்தார்.
அதன் பின், வங்கதேசத்தின் ரகிபுல் ஹசன் 2, அஷ்ரபுல் இஸ்லாம் 2, ஷோகனுர் ஸோபுஜ், ரெஸால் பாபு தலா ஒரு கோல் போட்டனர். இடையில், சீன தைபே வீரர் சங் ஜென் ஸி ஒரு கோலடித்தார். அதனால், 8-3 என்ற கோல் கணக்கில் வங்கதேசம் அணி, சீன தைபே அணியை நசுக்கி போட்டியில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொரியாவை, மலேசியா, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.
* இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் தங்கள் 2வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவு அணிகளான இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த 2 அணிகளும் நேற்று முன்தினம் முதல் சுற்றில் முறையே சீனா, கஜகஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளன. இந்தியா, ஜப்பான் அணிகள் 91 முறை சர்வதேச களத்தில் சந்தித்துள்ளன. அவற்றில் 81 முறை வெற்றிப் பெற்று இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஜப்பான் 6 ஆட்டங்களில் வென்றுள்ளது. தவிர, 4 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.