ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சூப்பர் 4 கடைசி போட்டியில் ஜப்பானை வீழ்த்துமா இந்தியா?
ஹாங்சோ: ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டிகளின் ஒன்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் ஏற்கனவே முடிந்த நிலையில் சூப்பர் 4 சுற்று ஆட்டம் நடந்து வருகிறது. அதில் இந்தியா, கொரியா, சீனா, ஜப்பான் நாடுகள் விளையாடி வருகின்றன.
இதுவரை நடந்த தலா 2 ஆட்டங்களில் 2லும் வென்ற சீனா பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2வது இடத்தில் உள்ள இந்தியா 4 புள்ளிகளுடன் பைனல் வாய்ப்பில் நீடிக்கிறது. கொரியா, ஜப்பான் அணிகள் தலா ஒரு தோல்வி, டிரா உடன் தலா ஒரு புள்ளிகளுடன் கடைசி 2 இடங்களில் உள்ளன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டிகள் இன்று நடக்கின்றன. அதிலொரு ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வென்றால் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு 7 புள்ளிகளுடன் முன்னேறும்.
அதே நேரத்தில் தோற்றால் சீனா-கொரியா இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். காரணம் கொரியா, ஜப்பான் அணிகள் வென்றால் இந்தியாவை போலவே தலா 4 புள்ளிகள் பெற்று இருக்கும். அதனால் இந்த 3 அணிகளில் அடித்த, வாங்கிய கோல்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில் பைனல் வாய்ப்பை பெறலாம். இதுவரை நடந்த ஆட்டங்களில் கோல் வித்தியாசத்தில் மற்ற அணிகளை விட இந்திய பெண்கள் அணிதான் முன்னிலையில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டங்கள் இந்த 3 அணிகளுக்கும் முக்கியமான ஆட்டங்களாக உள்ளன.