ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அபார வெற்றி
துபாய்: துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகள் மோதுகின்றன. துபாயில் நேற்று நடந்த போட்டியில், பாகிஸ்தானும், ஓமனும் மோதின. முதலில் ஆடிய பாக். அணியின் துவக்க வீரர்களாக ஷாகிப்ஸதா ஃபர்ஹான், சயிம் அயூப் ஆடினர். ஆமிர் கலீம் பந்தில் அயூப் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் வந்த முகம்மது ஹாரிசும், ஃபர்ஹானும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
ஃபர்ஹான் 29 ரன்னில் வீழ்ந்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹாரிஸ், 43 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 66 ரன் எடுத்திருந்தபோது ஆமிர் கலீம் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த பந்தில் கேப்டன் சல்மான் ஆகா ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த ஹசன் நவாஸ் 9 ரன்னில் வீழ்ந்தார். 20 ஓவர் முடிவில் பாக். 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்தது. ஓமன் தரப்பில் ஆமிர் கலீம் 3, ஷா ஃபைசல் 3 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 161 ரன் வெற்றி இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் அணி திணறியது. ஓமன் அணியில் மூன்று பேட்ஸ்மேன்களை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டநேர இறுதியில் ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் அயூப், முகீம், அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.