ஆசிய கிரிக்கெட் கோப்பை சர்ச்சை; வெற்றி கோப்பையை தூக்கிச்சென்ற பாக். தலைவர்: பிசிசிஐ கடும் கண்டனம்
மும்பை: இந்திய அணி கோப்பையை புறக்கணித்த நிலையில், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எடுத்துச்சென்ற செயலுக்கு பிசிசிஐ செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவின்போது பெரும் சர்ச்சை வெடித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள இந்திய அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடமிருந்து கோப்பையை ஏற்க முடியாது என்றும், போட்டிக்கு முன்பு ெமாஹ்சின் நக்வி வெளியிட்ட சில சமூக வலைதள பதிவுகள் ஆத்திரமூட்டும் வகையில் இருந்ததாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால், மொஹ்சின் நக்வி, கோப்பை மற்றும் வீரர்களுக்கான பதக்கங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவாஜித் சைகியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாங்கள் கோப்பையை வாங்க மறுத்துவிட்டோம் என்பதற்காக, அந்த ‘கனவான்’ கோப்பையையும், பதக்கங்களையும் தனது ஓட்டலுக்கு எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க முடியாது. மேலும், மொஹ்சின் நக்வியின் இந்த செயல் மிகவும் குழந்தைத்தனமானது. விளையாட்டு வீரருக்கு அழகில்லை. வரும் நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாநாட்டில் இதுகுறித்து மிகத் தீவிரமான மற்றும் வலுவான எதிர்ப்பை பிசிசிஐ பதிவு செய்யும். கோப்பையும், பதக்கங்களும் விரைவில் இந்திய அணிக்குத் திருப்பி அளிக்கப்படும் என நம்புகிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.