ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா- சீனா நாளை மோதல்!
ஹாங்சோவ்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் சீனாவும் நாளை மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா தனது கடைசி லீக் சுற்றில் சீனாவுடன் மோதுகிறது.
நேற்று நடைபெற்ற சூப்பர்-4 கட்டத்தின் இரண்டாவது போட்டியில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பாக மன்பிரீத் சிங் (17வது நிமிடம்), சுக்ஜித் சிங் (19வது நிமிடம்), ஷிலானந்த் லக்ரா (24வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (38வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மலேசியாவுக்காக ஷபிக் ஹசன் (2வது நிமிடம்) ஒரே கோல் அடித்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா தனது இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா நான்கு புள்ளிகளுடன் சூப்பர்-4 பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
புதன்கிழமை நடைபெற்ற முதல் சூப்பர்-4 போட்டியை இந்தியா 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இன்று ஓய்வு நாள். நாளை சீனாவுக்கு எதிரான கடைசி சூப்பர்-4 போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்தப் போட்டி டிரா செய்யப்பட்டாலும், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.