ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி!
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. நடப்பு ஆசிய கோப்பையில் தோல்வியே தழுவாத இந்திய அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் அபாரமாக கோலடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து போட்டியின் 28வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரித், சஞ்சய் ஆகியோர் பந்தை கடத்தி கொடுக்க அதனை தில்பிரீத் சிங் அபாரமாக அடித்து கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தது. பின்னர் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங், தனது இரண்டாவது கோலை அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்தில் கொரிய அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. இருந்தாலும் இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கொரிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி 50-வது நிமிடத்தில் 4வது கோல் அடித்தது. இதையடுத்து அடுத்த நிமிடத்தில் கொரிய அணி தங்களது முதல் கோலை அடித்தது.
ஆனால் அதன் பின் கொரிய அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வென்று 4வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.