ஆசிய கோப்பை இறுதியில் இன்று இந்தியா-பாக். மோதல்
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. அதில் முதல் 4 இடங்களை பெற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றிலும் இந்தியா மகத்தான வெற்றிகளை குவித்து முதலிடம் பிடித்தது. பாக். 2ம் இடத்தை கைப்பற்றியது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு, துபாயில் உள்ள சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானுடன் கடந்த 21ம் தேதி நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. தவிர, வங்கதேசத்தை 41 ரன் வித்தியாசத்திலும், இலங்கையை சூப்பர் ஓவரிலும் இந்தியா சாய்த்து தனி ஒருவனாக வலம் வருகிறது. மாறாக, பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றில், இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இருப்பினும், இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 11 ரன் வித்தியாசத்திலும் தட்டுத்தடுமாறி வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, ரசிகர்கள் மத்தியில் அளப்பரிய வரவேற்பை பெற்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று நடக்கும் போட்டியிலும் பாகிஸ்தானை மீண்டும் வென்று இந்தியா வெற்றிக் கோப்பையை வசீகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தங்கள் தோல்விகளால் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்தாக வெற்றியை பதிவு செய்ய பாக் அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.