பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக பட்டம் வென்ற இந்தியா; ஆசிய கோப்பைக்கான முழு ஊதியத்தை ராணுவத்திற்கு அளிக்கிறேன்: கேப்டன் சூர்யகுமார் நெகிழ்ச்சி
துபாய்: 17வது ஆசிய கோப்பை டி.20 தொடரின் பைனல் நேற்றிரவு துபாயில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. ஒருகட்டத்தில் 12 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன் என வலுவாக இருந்த பாகிஸ்தான் அடுத்த 33 ரன்னுக்குள் 9 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் 57, ஃபகார் ஜமான் 46 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் குல்தீப் யாதவ் 4, பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர்பட்டேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியஅணியில் அபிஷேக் சர்மா 5, கில் 12, கேப்டன் சூர்யகுமார் 1 ரன்னில் அவுட் ஆக சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 24 ரன் அடித்தார். கடைசி நேரத்தில் ஷிவம் துபே 33 ரன் எடுத்து கேட்ச் ஆனார். மறுபுறம் நங்கூரமாக நின்று ஆடிய திலக் வர்மா நாட் அவுட்டாக 53 பந்தில் 69 ரன் விளாசினார்.
அவருடன் ரிங்கு சிங் நாட் அவுட்டாக 4 ரன்னில் களத்தில் இருந்தார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 9வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் மகுடம் சூடியது. திலக் வர்மா ஆட்டநாயகன் விருதும், அபிஷேக் சர்மா தொடர் நாயகன் (314 ரன்) விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் பாக். அமைச்சரிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது பற்றி இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: இது நான் இதுவரை பார்த்திராத ஒரு விஷயம். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து, கிரிக்கெட்டைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, ஒரு சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை நான் பார்த்ததில்லை. இது எளிதாக கிடைக்கவில்லை. கடினமாக சம்பாதித்த வெற்றி. இதற்கு நாங்கள் தகுதியானவர்கள். மேலும் என்னால் எதுவும் சொல்ல முடியாது.
எனக்கு, உண்மையான கோப்பைகள் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கின்றன. எனது 14 வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கோப்பைகள். அவர்கள்தான் நாங்கள் இந்த பட்டத்தை வெல்லக் காரணம். இருப்பினும், ஒரு அணி கடுமையாகப் போராடி போட்டியை வென்று கோப்பையைப் பெறாமல் இருப்பது நான் இதுவரை பார்த்ததில்லை. ஆசியக் கோப்பை தொடருக்கான எனது அனைத்து போட்டி ஊதியத்தையும் இந்திய ராணுவத்திற்கு வழங்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாக். அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுப்பு
ஆசிய கோப்பை பைனல் முடிந்ததும் கோப்பை மற்றும் பரிசை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள் பாக். அமைச்சரிடம் இருந்து கோப்பையை பெறமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கடைசிவரை நான் தான் கோப்பையை கொடுப்பேன், இல்லையென்றால் என் கையில் வாங்காதீர்கள் என பாகிஸ்தான் அமைச்சர் திமிராக கூறிவிட்டார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் ரன்னர் அப் பரிசை பெற்றுவிட்டு சென்றுவிட்டனர்.
இந்தியா ஆசிய கோப்பையை பெறவில்லை.
மேலும் சாம்பியனுக்கான பரிசு தொகையையும் வாங்கவில்லை. இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசிய கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது. கோப்பையில்லாமல் அதனை பெற்றதுபோல் கேப்டன் சூர்யகுமார் மூன் வாக் செய்ய இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ``விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என பதிவிட்டுள்ளார்.
கோப்பை விரைவில் இந்தியா வரும்...
பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூறுகையில், ``பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.
ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்
ஆசிய கோப்பையில் இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா ஆசிய கோப்பையில் 3 போட்டியிலும் பாகிஸ்தானை வென்றதை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். போட்டியை டிவியில் பார்த்த ராணுவ வீரர்களும் இந்தியா வெற்றிபெற்றதும் துள்ளிக்குதித்து கொண்டாடினர்.
ரூ.21 கோடி பரிசு அறிவித்த பிசிசிஐ
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.21 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில் 3 அடி கொடுத்து இருக்கிறோம். ஒரு முறை கூட பதில் வரவில்லை. செய்தியை உணர்த்தி விட்டோம் என்று கூறி இந்த பரிசு தொகையை அறிவித்திருக்கிறது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் இந்த பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும். வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி, பயிற்சியாளர் மற்றும் மற்ற குழுவினருக்குரூ.50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கிடைக்கலாம்.
வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சி
ஆட்டநாயகன் திலக்வர்மா கூறுகையில், ``போட்டியில் நிறைய அழுத்தம் இருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். நான் களத்தில் மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். சஞ்சு, துபே சிறப்பாக விளையாடினர். அவர்களுடைய ஆட்டம் எனக்கும் அணிக்கும் உதவியாக இருந்தது. கம்பீர் பாய் என்னிடம் எந்த இடத்தில் விளையாடினாலும் அதற்கு ஏற்ற வகையில் விளையாடும் படி நெகிழ்வாக இருக்க வேண்டும் என கூறி இருந்தார். அதற்கு ஏற்ப கடுமையான பயிற்சி செய்து தயாராகி இருந்தேன். அணியின் வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.
தொடர் நாயகன் அபிஷேக் ஹேப்பி!
தொடர் நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மாவுக்கு பரிசு தொகையுடன் விலை உயர்ந்த காரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் கூறுகையில், ``உலகக்கோப்பை வென்ற ஒரு அணியின் தொடக்க வீரராக இடம்பெறுவது என்பது சுலபமான காரியம் கிடையாது. இதற்காக நான் திட்டமிட்டு கடுமையாக உழைத்து இருக்கிறேன். என்னால் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைக்க முடியும் என்று தெரியும். அதை நான் நம்புகிறேன். சுழற்பந்து, வேகப்பந்து என யார் வந்தாலும் அவர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட வேண்டும். இப்படி ஒரு மன நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
செக்கை தூக்கி எறிந்த ஆகா!
பாகிஸ்தான் அணிக்கு ரன்னருக்காக ரூ.1.3 கோடிக்கான காசோலை பாக். கேப்டன் சல்மான் ஆகாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் தோல்வியின் விரக்தியில் அதனை வாங்கிய அவர் அடுத்த சில நொடிகளில் அதனை தூக்கி எறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், ``தோல்வியை ஜீரணிப்பது மிகவும் கடினம். பேட்டிங்கில் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டோம், ஆனால் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடித்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும்’’ என்றார்.