ஆசியாவின் மிகச்சிறந்த கிராமப்புற சுற்றுலாத்தல பட்டியலில் மூணாறு: 7வது இடம் பிடித்து அசத்தல்
மூணாறு: ஆசியாவின் மிகச்சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மூணாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ‘கடவுளின் சொந்த நாடு’ என அழைப்பர். இங்கு இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை. மலைத்தொடர்கள், பசுமை மிகுந்த பள்ளத்தாக்குகள், சலசலக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், பாய்ந்து செல்லும் ஆறுகள் ஆகியவை மாநிலத்தை அழகூட்டும் ஆபரணங்களாக திகழ்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு ‘தென்னகத்தின் காஷ்மீர்’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல தனியார் டிஜிட்டல் பயண தளம் ஒன்று தனது இணைய பக்கத்தில் ஆசியாவின் சிறந்த 8 கிராமப்புற சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுற்றுலாப்பயணிகளின் விருப்ப இடமான மூணாறு இடம் பிடித்துள்ளது. 2025 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சுற்றுலாப்பயணிகள் தேடிய 8 சுற்றுலா பகுதிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மூணாறு 7வது இடத்தை பிடித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடை வாசஸ்தலமாக இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பச்சைப் பசேல் தேயிலை தோட்டங்கள், மலை தழுவும் மேகக் கூட்டங்கள், சில்லென்று வீசும் காற்று, அவ்வப்போது மழை தெளித்து கோலமிடும் இயற்கை, நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், வியூ பாயிண்ட்கள், காய்கறித் தோட்டங்கள், புல்வெளி நிறைந்த காடுகள், இரவிகுளம் தேசிய பூங்காவில் உள்ள அபூர்வ இன வரையாடு, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள், தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனைமூடி ஆகியவை மூணாறில் அமைந்துள்ளது. மூணாறை தவிர கேமரூன் ஹைலேண்ட்ஸ் (மலேசியா), காவோ யாய் (தாய்லாந்து), புன்காக் (இந்தோனேசியா), புஜிகாவாகுச்சிகோ (ஜப்பான்), கென்டிங் (தைவான்), சாபா (வியட்நாம்), மற்றும் பியோங்சாங்-கன் (தென் கொரியா) ஆகியவை ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.