8 ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை வென்று அசத்தல்; 2026 உலககோப்பையில் சிறப்பாக ஆடுவதே இலக்கு: இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டி
ராஜ்கிர்: பீகார் மாநிலம் ராஜ்கிரில் நேற்று நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் 4-1 என தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 2026 ஹாக்கி உலக கோப்பையில் ஆடுவதற்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது. இந்த வெற்றி மூலம் உற்சாகத்தில் இருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள், கேப்டன் ஹர்மன்பிரீத், பயிற்சியாளர் கிரேக் புல்டன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆசிய கோப்பையை கைப்பற்றிய பின் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறியதாவது: இந்த வெற்றி பரவசமூட்டுகிறது. தொடர்ச்சியாக போட்டிகள் இருந்ததால் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று உறுதியாக இருந்தோம். அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. ராஜ்கிர் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்கள் தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்தினர். 2026 உலக கோப்பைக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவதற்கு ஆயத்தமாக வேண்டும் என்பதே எங்களின் அடுத்த இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.