ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி இந்தியாவிடம் மலேசியா சரண்
ராஜ்கிர்: 12வது ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் பீகார் மாநிலத்தில் நடந்து வருகின்றன. 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. நேற்றைய ஆட்டத்தில் இறுதி போட்டி வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றியடைய வேண்டும் என்ற நிலையில் இருந்த இந்தியாவும், மலேசியாவும் மோதின.
ஆட்டத்தின் முதல் கால்பகுதி முதல் நிமிடத்திலேயே மலேசிய வீரர் ஷபிக் ஹாசன் ஒரு கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் இந்திய வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு மாறினர். 2வது கால்பகுதி துவங்கிய 5 நிமிடங்களில் ஹர்மன்ப்ரீத்தும், சுக்ரிஜித் சிங், ஷிலேண்ட் லார்காவும் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க இந்தியா 3:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 3வது கால் பகுதியில் விவேக் சாகர் கோல் அடிக்க இந்தியா 4:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 4வது கால் பகுதியில் இரு அணிகளும் எவ்வித கோல் அடிக்காத நிலையில் இந்தியா 4:1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதி போட்டி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் சீனா 3:0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தியது.