ஆசிய கோப்பை ஹாக்கி: துடிப்புடன் துரத்திய ஜப்பான் விடாது வீழ்த்திய இந்தியா: கஜகஸ்தானுடன் இன்று மோதல்
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ஜப்பான் அணியை, 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி வாகை சூடியது. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள், பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில், ஏ-பிரிவில், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. போட்டி துவங்கி 4வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்தீப் சிங் அபாரமாக கோலடித்து அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார்.
அடுத்த ஒரு நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அற்புதமாக ஒரு கோலடிக்க, 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து போட்டியின் 38வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோஸெய் கவாபே தன் அணிக்காக முதல் கோலடித்து ஆறுதல் தந்தார். போட்டியின் 45வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் மேலும் ஒரு கோலடித்தார்.
இந்தியா வலுவான நிலையில் இருந்தபோது, ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், 59வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கவாபே மீண்டும் ஒரு கோல் போட்டார். அதன் பின் வேறு கோல் விழாததால், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.இன்று நடக்கும் அடுத்த லீக் போட்டியில் கஜகஸ்தான் அணியை, இந்தியா எதிர்கொள்கிறது.