சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக தெரிவித்தார். அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டிஎன்பிஎல் தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் கலக்கியிருந்த அஸ்வினுக்கு 3வது வரிசையில் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
மேலும், அவரது பந்து வீச்சும் சுமாராகவே அமைந்தது. 9 போட்டிகளில் 283 ரன்களும், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். சரியாக சோபிக்காத உள்ளூர் வீரரான அஸ்வின் மீது விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலக்குவதாகவும், ராஜஸ்தான் அணியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அஸ்வின் திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ”சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு துவக்கத்தை கொண்டிருக்கும்.
ஐபிஎல் வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் துவங்கியுள்ளது. அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.