ஆஷஸ் தொடர் 2வது டெஸ்ட் ட்டி படைக்கும் ஆஸ்திரேலியா: 44 ரன் முன்னிலை பெற்று அசத்தல்
பிரிஸ்பேன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அதையடுத்து, 2வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் நகரில் நேற்று முன்தினம் துவங்கியது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் குவித்திருந்தது. அந்த அணியின் ஜோ ரூட் அட்டகாசமாக ஆடி சதம் விளாசினர். இந்நிலையில், 2ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து 334 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.
அதன் பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33 ரன்னிலும், ஜேக் வெதரால்ட் 72 ரன்னிலும் அவுட்டாகினர். பின் வந்த மார்னஸ் லபுஷனே 65, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 61, கேமரூன் கிரீன் 45, அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 46 ரன், ஜோஷ் இங்லீஸ் 23 ரன் எடுத்தனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 378 ரன் குவித்து, 44 ரன் முன்னிலை பெற்றிருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.