ஆஷஸ் தொடர் இன்று துவக்கம்; வேட்டைக்கு தயாரான ஆஸ்திரேலியா-இங்கிலாந்து: வெல்ல போவது யார்?
பெர்த்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் பிரபலமான ஆஷஸ் தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. கடைசியாக 2023ம் ஆண்டு இங்கிலாந்து ஆஷஸ் தொடர் நடந்தது. இந்த தொடர் சமனில் முடிந்தது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 7.50 மணிக்கு உலகின் அதிவேக பந்து வீச்சு மைதானமான பெர்த்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இந்த தொடருக்கான கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிமுகப்படுத்தினர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட், பேட்ஸ்மேன் ஜேக் வெதரால்ட் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இங்கிலாந்து அணியில் 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெர்த்தில் வேகபந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதா? குறித்து இன்று காலை பிட்ச்சை பொறுத்து முடிவெடிக்கப்படும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து உள்ளனர். இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் இடம் பெற்றுள்ளனர்.
பிட்ச்சின் தன்மையை பொறுத்து ஷோயப் பஷீர் அல்லது ஒரு வேகபந்து வீச்சாளரை கழற்றிவிட இங்கிலாந்து அணி திட்டமிட்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியாவிடம் இருந்து அதை பறிக்க இங்கிலாந்து அணி தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் கோப்பையை தக்க வைத்து கொள்ள ஆஸ்திரேலியாவும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் போட்டியில் அனல் பறக்கும்.
* ஆஷஸ் உருவானது எப்படி?
1882ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 85 ரன் இலக்கை எட்ட முடியாமல் 77 ரன்னில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுகுறித்து ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஓவலில் 1882ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இங்கிலாந்து கிரிக்கெட் மடிந்து விட்டது.
அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற தொரை கைப்பற்றியது. அப்போது மெல்போர்னில் கூடியிருந்த பெண்கள், கலைநயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இங்கிலாந்து பெல்க்கிடம் பரிசாக அளித்தனர்.
இங்கிலாந்தின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில் ஸ்டம்ப் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில் தான் ஆஷஸ் பெயர் உதயமாகி, 2 ஆண்டு ஒருமுறை ஆஷல் தொடர் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிக்கு ஜாடி வடிவால் ஆன கோப்பை வழங்கப்படுகிறது.
* ஆஷஸில் இதுவரை...
இதுவரை நடந்து உள்ள ஆஷல் தொடரில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. 7 தொடர் டிராவில் முடிந்து உள்ளது. கடைசியாக 2023ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணி 2010-11ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றதில்லை. இதனால், இந்த முறை ஆஸி. மண்ணில் இங்கிலாந்து சாதிக்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.
* 150 ஆண்டு வரலாற்றில் முதல்முறை
150 ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆடும் லெவனில் ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகிய 2 பழங்குடி வீரர்கள் விளையாட உள்ளனர் . இதுவரை ஆஸி. ஆடும் லெவனில் ஒரு பழங்குடி வீரர் மட்டுமே விளையாடி உள்ளனர். அதன்படி, ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ஸ்காட் போலண்ட் தனித்தனியாக விளையாடி உள்ளனர். முதல் முறையாக ஆடும் லெவனில் 2 பழங்குடி வீரர்கள் விளையாட உள்ளனர்.