தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மணப்பாறை பகுதியில் முறுக்கு தயாரிப்பு பணி தீவிரம்!!
திருச்சி: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மணப்பாறை பகுதியில் முறுக்கு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் வீடுகளில் எளிதில் செய்யக்கூடியதுமான தின்பண்டமாக முறுக்கு திகழ்கிறது. ஆனாலும் மணப்பாறை முறுக்குக்கு மட்டும் ஏன் இவ்ளோவு மவுசு என்று பார்த்தால் அதற்கு அந்த ஊரின் தண்ணீர் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. இந்த ஊரின் தண்ணீர் இயல்பாகவே லேசான உப்பு சுவையுடன் இருப்பதால் இங்கு பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வரும் முறுக்குக்கும் தனி சுவை கிட்டுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலை மாவு முறுக்கு, அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, சிறுதானிய முறுக்கு, பூண்டு முறுக்கு என்று மணப்பாறையில் முறுக்கு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதனால் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசு உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், மலேசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மணப்பாறை முறுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் விமானங்களில் முறுக்கு அனுப்பிவைக்க ஒரு கிலோவுக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வரை பார்சல் கட்டணம் உள்ளதாகவும் எனவே வரியை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முறுக்கு ஆர்டர்கள் அதிகளவில் வந்திருப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் புவிசார் குறியீடு கிடைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் மணப்பாறை முறுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்பதால் அரசு அதற்கு உதவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.