அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை விவகாரம்.. டெல்லியில் 30ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்: ஆம் ஆத்மி அறிவிப்பு!!
இதனிடையே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் கஷ்டப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இன்று அவர் காணொலி காட்சி வாயிலாக திகார் சிறையில் இருந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், திகார் சிறை நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து டெல்லியில் வருகிற 30ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உரிய சிகிச்சை தர வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. சிறையில் உள்ள கெஜ்ரிவாலை இந்தியா கூட்டணியினர் நேரில் சந்திக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை வைத்துள்ளது.