ரூ.2,438 கோடி மோசடி செய்த விவகாரம்; ஆருத்ரா இயக்குநர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் ஈடி சோதனை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
சென்னை: பொதுமக்களிடம் ரூ.2,438 கோடி மோசடி ெசய்த விவகாரத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஏஜென்டுகள் தொடர்பான சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால் முதல் 2 மாதங்களுக்கு சொன்னபடி முதலீடு பணத்திற்கான வட்டி கொடுத்தனர். அதன் பிறகு யாருக்கும் வட்டி மற்றும் முதலீடு ெசய்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் ரூ.2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதனை தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் என 5 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் ஆருத்ரா மோசடியில் முக்கிய குற்றவாளியான பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ், பெண் இயக்குநர் மாலதி, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராஜசேகர், இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூபேஷ்குமார் மற்றும் ஏஜென்டுகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சினிமா நடிகரும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். மேலும், சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் இருந்து தங்கம், சொகுசு கார்கள், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் அவருக்கு வேண்டிய ஒரு பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ேபாலீசார் அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை இன்று ஒரே நேரத்தில் அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய இயக்குநர்களாக இருந்த வில்லிவாக்கத்தில் உள்ள இயக்குநர் ராஜசேகர் வீடு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பாஜக முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரீஷ் வீடு, பெண் இயக்குநர் மாலதி வீடு, சென்னை வில்லிவாக்கத்ைத சேர்ந்த ராஜசேகர் வீடு, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த உஷா வீடு, பூந்தமல்லி திருமால் நகரை சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத் வீடு, நாராயணி வீடு, சிட்லப்பாக்கம் சந்தியா கார்டன் பகுதியை ேசர்ந்த ரூபேஷ்குமார் வீடு என சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பொதுமக்கள் பணத்தை சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள், தமிழகம் முழுவதும் பல கோடிக்கு நிலங்கள் வாங்கி குவித்த ஆவணங்கள், வழக்கில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததற்கான வங்கி கணக்கு விபரங்கள், துபாயில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை முடிந்த பிறகு தான் எத்தனை கோடி அளவுக்கு சட்டவிரோதமாக ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் மற்றும் அதன் ஏஜெண்டுகள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக நிர்வாகியை மிரட்டி ரெய்டா
கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிரான நடவடிக்கையில் முன்னாள் மாநில தலைவர் ஒருவர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ஆருத்ரா நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் மிரட்டி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் பதவி இழந்த முன்னாள் மாநில தலைவர், ஆடு மட்டுமே வளர்ப்பதாகவும், விவசாயம் பார்ப்பதாகவும், தன்னுடைய நண்பர்கள் செலவுக்கு பணம் கொடுப்பதாகவும் கூறி வந்தவர், தற்போது பல கோடி ரூபாய்க்கு நிலங்களை வாங்கிக் குவித்து வருகிறார். தொழில்களை தொடங்குகிறார். அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால், அவரை மிரட்டுவதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.