அருப்புக்கோட்டை அருகே பலத்த காற்றுடன் கனமழை: பெரும்பாலான வாழை மரங்கள் குலை தள்ளி இருந்தன
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சுமார் 1000ஏக்கருக்கு மேலாக வாழை மரங்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில், அப்படியே சாய்ந்து அனைத்தும் நாசம் அடைந்தது. வாழை குலைகள் பிஞ்சாக இருப்பதால், இதனால் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த நிலையில், காற்றுடன் பெய்த கனமழையினால் மிகவும் நஷ்டம் அடைந்ததாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல் சூறாவளி காற்றின் காரணமாக வாழை மரம் சாய்ந்ததில் எந்தவித நிவாரணம் வழங்கவில்லை எனவும் ஏற்கனவே மிகுந்த நஷ்டத்தில் உள்ள தங்களுக்கு இந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த முறையாவது அரசாங்கம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஒரு வருடம் நடைபெறும் விவசாயத்தில் அறுவடை வரும் பொழுது வாழை மரங்கள் சாய்ந்ததால் தங்கள் உழைப்பு வீணாகிவிடும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். இதேபோல் சிதம்பராபுரத்தில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.