அருப்புக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
*3 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ரவுண்டானா தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் யோகராஜ் (33). இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (18), சுந்தர் (22), சதாம் உசேன் ஆகிய 4 பேரும் நேற்று முன் தினம் இரவு விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு காரில் வந்தனர். காரை யோகராஜ் ஓட்டி வந்தார்.
அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ரவுண்டானா தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் யோகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சுந்தர், தமிழரசன், சதாம் உசேன் ஆகியோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யோகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.